Wednesday, 9 October 2013

Kanipakam - Varasiddhi Vinayaka Temple. காணிப்பாக்கம் - வரசித்தி வினாயகர் கோவில்.


விபூதி?  குங்குமம்?  சந்தனம்?
நீங்கள் எத்தனையோ பிள்ளையார் கோயில்களுக்குச் சென்றிருப்பீர்கள். மேலே குறிப்பிட்ட மூன்றில் ஒன்றைத்தான், அங்கே வாங்கி நெற்றியில் இட்டுக் கொண்டிருப்பீர்கள்.  

ஆனால், ஆந்திராவின் சித்தூருக்கு அருகில் உள்ள காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் என்ன பிரசாதம் தெரியுமா?
ஒரு ஸ்பூன் தண்ணீர்!
அதுவும் கிணற்று நீர்!

அந்த ஒரு உத்தரணி தண்ணீரைப் பெற்றுக்கொள்ளத்தான் அங்கே கூட்டம் அலை மோதுகிறது. அதனைப் பருகினால் ஊனம் தீரும் என்றும் நோய்கள் எல்லாம் நீங்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.
அப்படி என்ன அந்தக் கிணற்றுத் தண்ணீருக்கு விசேஷம்?

காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் தோன்றியதே அந்தக் கிணற்றில்தான்!இன்றும் அதே கிணற்றின் மேல்தான் அவர் காட்சி தருகிறார். அது மட்டுமல்ல, நம் ஊர் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் போல இந்தக் காணிப்பாக்கம் விநாயகரைச் சுற்றி கிணற்று நீர் எப்போதும் ஊறிக்கொண்டேயிருக்கிறது.

        காணிப்பாக்கம் விநாயகர் கோயிலைப் பார்த்ததும் நமக்குப் பிள்ளையார்பட்டியின் நினைவு வரும். பிள்ளையார்பட்டி போலவே எதிரில் குளம் அமைந்திருக்கிறது. குளத்தின் நடுவில் ஒரு விநாயகர் `ஜம்'மென்று காற்று வாங்கியபடி, அமர்ந்திருக்கிறார். அலங்காரமில்லாத வெண்மை நிற ராஜகோபுரத்தை அடுத்து உள்ளே சென்றால், அலங்காரமில்லாமல், சுயம்புவாகக் காட்சி தரும் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகரைக் காணலாம்.

     மிகவும் சிறியதாக இருந்த கோயிலை 11-ம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழன், பெரிதாகக் கட்டித் திருப்பணி செய்தான். 1336-ல் விஜயநகர மன்னர்களும் இங்கே சிறப்பு வழிபாடு செய்ததாக வரலாறு கூறுகிறது.

காணி நிலத்தில் தோன்றியதால், காணிப்பாக்கம் விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டது. பக்தர்கள், தேங்காய் உடைத்தபோது பரவிய இளநீர், ஒரு காணிப் பரப்பளவு பரவியதால் `காணிப்பாக்கம்' என்ற பெயர் ஏற்பட்டதாகவும் கூறுகிறார்கள். (பாரகம் என்றால் நீர் பரவுதல் என்று தெலுங்கில் அர்த்தம். பாரகம் என்பதே பாக்கம் என்றானது!)


நம் ஊர் பிள்ளையார்கள்போல் இவருக்குப் பெரிய அலங்காரம் எதுவும் கிடையாது. நீளத் தும்பிக்கை, பெரிய காது, சிறிய கண்கள் என்றெல்லாமும் கிடையாது. கிணற்றில் எப்படித் தானாக, சுயம்புவாகத் தோன்றினாரோ, அதேபோல, எந்த மாறுதலும் இல்லாமல் `மொழுக்'கென்று இருக்கிறார் பிள்ளையார். பக்தர்கள் இவரை பயபக்தியுடன் வணங்குகிறார்கள்.

`காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் சாட்சியாக நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறெதுவும் இல்லை' என்று கூறினால், அதனை சத்தியப் பிரமாணமாக இன்றும் ஆந்திர கிராமப் பஞ்சாயத்துகளில் ஏற்றுக்கொள்கிறார்கள்.

காரணம், இந்த விநாயகர் முன் யாராவது பொய் சொன்னால் 90 நாட்களுக்குள்ளேயே பொய் சொன்னவர் கடுமையாக தண்டிக்கப்படுவார் என்பதால்தான்!

கேணி பக்கத்தில் காட்சி தரும் காணிப்பாக்கம் கணபதியைப் பார்த்தாலே, யாருக்கும் பொய் சொல்லத் தைரியம் வராது. உண்மையைத் தவிர வேறெதுவும் வார்த்தைகள் வெளிவராது!
உண்மை மட்டுமல்ல, ஊனமுற்றவர்களையும் இந்த விநாயகருக்கு மிகவும் பிடிக்கும். அவர்களின் குறைகளையெல்லாம் தீர்த்து வைப்பதில் இவருக்கு தீராத இஷ்டம்.




No comments:

Post a Comment

Feel free to express about this blog and your need and requirements regarding yatra and pilgrimages.